Tuesday, 14 August 2018

கலைஞர் நினைவேந்தல் நிகழ்ச்சியில்

தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு.இராமகிருட்டிணன் நினைவுரை

தமிழ்நாடு இன்று முதன்மையான மாநிலமாக உள்ளது. தமிழகத்தை இந்தியாவோடு கூட ஒப்பிடக்கூடாது. தமிழ்நாட்டின் வளர்ச்சியை அய்ரோப்பிய நாடுகளோடு தான் ஒப்பிட வேண்டும் என சொல்லி, நோபல் பரிசு வென்ற அமிர்திய சென் அவர்கள் கூறியுள்ளார். அந்த அளவிற்கு முதன்மை மாநிலமாக தமிழகம் இன்று உண்டென சொன்னால், அதற்கு பெருமை மிகு  காரணம் கலைஞர் என்றால் அது மிகை ஆகாது. காரணம், 1929ஆம் ஆண்டு தந்தை பெரியார் செங்கல்பட்டில் நடந்த சுயமரியாதை மாநாட்டில் என்னென்ன தீர்மானங்களை நிறைவேற்றினாரோ, அதை பின்னாட்களில் நிறைவேற்றியவர் தான் கலைஞர். 1929 மாநாட்டில் பெண்களுக்கு  இடஒதுக்கீடு கேட்டார். அதன்படியே பெண்களுக்கு உள்ளாட்சி துறையிலே, வேலைவாய்ப்பிலே, ஆசிரியர் பணியிடங்கள் என அனைத்து துறையிலும் இட ஒதுக்கீடு வழங்கினார்.

அதே போல கலைஞர் எந்த இடத்திலும் பெரியாரை விட்டுக்கொடுத்தவர் அல்ல. 1973  ஆண்டு ஈரோட்டில்  பெரியார் மற்றும் குன்றக்குடிகள் அவர்கள் தலைமையில் அய்யாவின் சிலையை திறந்து வைக்கிறார், அப்போது ஒரு முழக்கத்தை வைக்கிறார் "பாராட்டி போற்றி வந்த பழமை வாதமெல்லாம் ஈரோட்டு பூகம்பத்தால் இடியுது பார்" என்றார். அந்த அளவிற்கு அய்யா மீது பற்று கொண்டவர் அய்யா கலைஞர் அவர்கள்.

தோழர்களே.. அய்யா அவர்கள் கொண்டு வந்த தீர்மானங்கள், திட்டங்கள் ஆகியவற்றை சட்டங்களாக கொண்டு வந்தது மட்டுமல்ல. எல்லாருக்கும் தெரிந்த செய்தி தான். அய்யா அவர்கள் இறந்தபோது அரசு மரியாதை கொடுக்க வேண்டும் என கலைஞர் சொன்னபோது, அதிகாரிகள் எதை அரசு பதவியிலும் இல்லாதவர்களுக்கு அரசு மரியாதை கொடுக்க சட்டத்தில் இடமில்லை என சொன்னபோது, அடுத்த நொடி "காந்தி எந்த பதவியில் இருந்தார் என்பதற்காக அரசு மரியாதை கொடுக்கப்பட்டது?" என்னக்கேட்டு அதிகாரிகளை வாயடைக்க செய்து அய்யாவிற்கு அரசு மரியாதை அளித்தார்.

அதே போல, இங்கே பொங்கலூர் பழனிசாமி அவர்கள் இருக்கிறார். அவர் அடிக்கடி என்னிடம் கூறுவார். "கலைஞர் அவர்கள் கோவை வரும் போதெல்லாம் உன்னை கேட்பார் அப்பா" என்பார். அந்த அளவிற்கு, அவர்  எங்கு இருந்தாலும் செயல்படுகின்ற தோழனை கவனிக்கின்ற ஆற்றல் அவரிடத்தில் இருந்தது. அதன் விளைவாக தான் சேலம் கோட்டம் நமக்கு கிடைத்தது. அதற்காக இங்குள்ள அனைத்து கட்சிகளும், இயக்கங்களும் போராடினோம். கடைசியாக கேரளா அரசாங்கம் ஈரோடு, கோவை ஆகியவற்றையாவது  பாலக்காட்டோடு   சேர்க்க வேண்டும் என்றது. அதையும் கடுமையாக எதிர்த்தோம். 2007 ஓணம் அன்றைக்கு இங்கே நாமும், சேலத்தில் வீரபாண்டி ஆறுமுகம் அவர்களும் ரயில் மறியலில் ஈடுபட்டோம். உடனே அன்று முதல்வராக இருந்த அச்சுதானந்தம் கலைஞரையும், அன்றைய ரயில்வே அமைச்சரான லல்லு பிரசாத்தையும்  சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது நாம் இங்கே மாணவர்களோடு இணைத்து போராடிக்கொண்டு இருந்தோம். அப்போது வீரபாண்டியார் அழைத்தார் "தலைவர் உங்க கூட பேச சொன்னாரு, அங்க பேச்சுவார்த்தைல கடைசியா கிணத்துக்கிடவையாவது பாலக்காடோடு சேர்க்க வேண்டும் என கேட்கிறார்களாம், கலைஞர் தான் அங்க போராடீட்டு இருக்கற ராமகிருஷ்ணனை கேளு என்றார்" எனக் கூறினார். கலைஞர் முடிவ எடுத்தா சரியாகத் தான் இருக்கும் என ஒத்துக்கொண்டோம்..

அதே போல பெருமதிப்பிற்குரிய தோழர்களே, 
இங்கே இருக்கிற பெரியார் சிலை அமைக்கப்பட்டதும் ஒரு வரலாறு. கலைஞர் என்ற எவ்வளவு நினைவாற்றல், எவ்வளவு சுறுசுறுப்பு என்பதை நேரில் கண்டோம். பெரியார் சிலை வைக்க கடிதம் கொடுத்து வைக்க  வேண்டும் என்பதற்காக, கலைஞருடன் நடை பயிற்சி மேற்கொள்ளும் பேராசிரியர் நாகநாதன் அவர்களிடம் கொடுத்தோம். அவரும் கொண்டு போய் கலைஞரிடம் 8  மணிக்கு கொடுத்துள்ளார். சரி நானும் ஒரு இரண்டு நாள் ஆகிவிடும் என நினைத்து, நானும் பொங்கலூராரும் அறிவாலயத்திலே, கலைஞர் வரும் வழியில் நின்றிருந்தோம். கலைஞர் சரியாக காரில் வந்தவர், எங்களை பார்த்தவுடனே "என்ன பெரியார் சிலைக்கா"என்றார். நாங்களும் ஆமாம் என்றோம். "சரி போய் முதன்மை செயலாளர் ராஜ மாணிக்கத்தை பாருங்க" என்றார். நாங்களும் அவரை மறுநாள் போய் பார்த்தோம். பார்த்தால் அவர் சத்தம் போடுகின்றார் "எங்க போனீங்க நேத்து எல்லாம்? 8 மணிக்கு கொடுத்த கடிதத்திற்கு 9 மணிக்கு கையெழுத்து போட்டு ஆர்டர் கொடுத்துட்டாரு" என்றார். ஒரு நாள் முழுக்க எங்களை தேடி உள்ளனர். இங்க வந்து பார்த்தால் அபுல்ஹாசன் கலெக்டர் அவர்களும் எங்களை சத்தம் போடுகின்றார் "நேற்றிலிருந்து உங்களை தேடுகின்றோம், எங்கே போனீங்க..?" என்கிறார். இப்படி ஒரு மணி நேரத்தில் உத்தரவு  போட்டு அமைக்கப்பட்டது தான் இந்த பெரியார் சிலை.

அதே போல பெரியார் என்றால் கலைஞருக்கு எவ்வளவு ஈடுபாடு என சொல்வதற்கு சிறந்த உதாரணம் என்னவென்று சொன்னால் 2009 நாங்கள் ஈழத்திற்காக போராடிக்கொண்டு இருக்கையில், இன்று பார்ப்பன கிரிஜா வைத்தியநாதன் போல, அன்று ஒரு பார்ப்பன தலைமைச் செயலர் இருந்தார். அவர் நம்மீதுள்ள ஈழப் விடுதலைக்காக நம் மீது முன்னரும், இப்போதும் உள்ள வழக்குகள், போராட்டங்கள் ஆகியவற்றை புகைப்பட ஆதாரமாக ஒரு பைலில் வைத்து, கலைஞர் முன் வைத்து "பெரியார் திராவிடர்  கழகத்தை" தடை செய்ய வேண்டும் எனக்கூறுகிறார். அதை புரட்டிப்பார்த்த  கலைஞர் "பெரியார் இயக்கத்தை என் கையால் நான் தடை செய்வதா..? முடியவே முடியாது" எனக்கூறி அந்த பைலை தூக்கி எறிந்தார்.

அப்படிப்பட்ட தலைவர். ஒரு வரலாறே முடிந்து விட்டது. ஒரு அத்தியாயமே முடிந்து விட்டது. இனி நாம் புதிய அத்தியாயத்தை தான் துவங்க உள்ளோம். இங்கே படங்களை பார்க்கின்றோம். பெரியாரும்,அண்ணாவும், கலைஞரும் நடந்து போவது போல உள்ள படம். அவர்கள் நம்மை விட்டுச்சென்றாலும் அவர்கள் விட்டுச்சென்ற கொள்கைகள் இருக்கின்றது, நான் பணிவோடு கேட்டு கொள்கிறேன். அந்த கொள்கைகளை நாம் பின்பற்றும் வரை நம்மை யாரும் அசைக்க முடியாது எனக்கூறிக்கொண்டு வீர வணக்கத்தோடு முடித்துக் கொள்கிறேன்.

10.08.2018 கோவையில் கலைஞர் அவர்களுக்கு நடத்திய அஞ்சலி நிகழ்ச்சியின் முடிவில் 

தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு.இராமகிருட்டிணன் அவர்கள் பேசியது

No comments:

Post a Comment

தந்தை பெரியாரின் 140ஆவது பிறந்தநாள் விழா!

கோவை வெங்கிட்டாபுரத்தில் அறிவுலக ஆசான் தந்தை பெரியாரின் 140ஆவது பிறந்தநாள் விழா நடந்தது !    பகுத்தறிவுப் பகலவன் தந்தை‍‍ பெரியா...