Monday 19 October 2015

கோவையில் ஆர்.நல்லகண்ணு...

'' மூடநம்பிக்கைகளுக்கு இடம் கொடுக்கக்கூடாது..! ''

கோவையில் ஆர்.நல்லகண்ணு.



கோவை வேலாண்டி பாளையத்தில் நேற்று (18.10.2015 ) மாலை சங்கமம் அமைப்பின்11 ஆம் ஆண்டு விழா நடைபெற்றது அதில் கலந்து கொண்டு பேசிய இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு நம்முறைய பாரம் பரியமான சகிப்புத்தன்மை எங்கே போகிறது என்று வருத்தம் தெரிவித்தார்.

சங்கமம் இது கோவை வேலாண்டிபாளையத்தில் செயல் பட்டு வரும்அமைப்பு. அரசியல், கலை, இலக்கியம் குறித்து விவாதங்கள் செய்வதும். நல்ல கருத்துக்களுக்கு ஆதரவும் பாராட்டுகளையும் தெரிவிப்பதுமாக செயல்பட்டு வருகிறது. இது ஆறு உறுப்பினர்களுடன் துவங்கிய இந்த அமைப்பு தற்போது 16 உறுப்பினர்களுடன் செயல்பட்டு வருகிறது. இதற்கு ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் இருக்கிறார்கள். முற்போக்கு சிந்தனையுள்ளவர்களை கண்டறிந்து தங்களோடு இணைத்து செயலாற்றும் நல்ல சிந்தனையுள்ள தோழர்கள் உள்ள அமைப்பு சங்கமம்.
அந்த வகையில் குத்தூசி குருசாமி படிப்பகமும் சங்கமத்தோடு இணைந்து நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளது.

இந்த அமைப்பின் 11 ஆம் ஆண்டு விழா நிகழ்ச்சியில் வாழ்நாள் சாதனையாளர் கவிஞர் புவியரசு, மூத்தபோதுவுடமையாளர் அம்பி ( எ) தி.ரங்கசாமி, எழுத்தாளர் சி.ஆர்.ரவீந்திரன், பல்துறை செயல்பாட்டாளர் ப.பா. ரமணி, ஒய்வு பெற்ற உதவி ஆய்வாளர் குட்டி ( எ) ராமன்குட்டி இசைக் கலைஞர் தபேலா ஆனந்த், சிற்பக் கலைஞர் பூவா.எஸ்.ஜெகநாதன், இளம் விஞ்ஞானி ந.சிபிதரன் ஆகியோருக்கு பாராட்டு சான்றும் நினைவு பரிசும் வழங்கப் பட்டது. இவற்றை மூத்த தலவைர் ஆர்.நல்ல கண்ணு வழங்கினார்.



இந்த விழாவில் நிறைவாக பேசிய அவர், "சங்கமம் என்றால் சங்கம் என்ற சொல்லில் இருந்து தான் வருகிறது. சங்கம் என்றால் எதிரும் புதிருமானவர்கள் கூடி பேசி விவாதித்து ஒரு முடிவுக்கு வருவது. அது தான் ஜனநாயக முறை. சங்ககாலத்தில் நம்முடைய தமிழ் புலவர்கள் எதிரும் புதிருமானவர்கள் கூடி விவாதித்து நல்ல கருத்துக்களை சமூகத்திற்கு கொடுத்து இருக்கிறார்கள்.

ஆனால் தற்போது இந்த கூடிப் பேசி விவாதிக்கும் முறைக்கே ஆபத்து வந்துள்ளது. எதிர்க் கருத்து உள்ளவர்கள் கொல்லப் படுகிறார்கள் என்று நினைக்கும் போது என்னைப் போன்ற வயதானவர்களுக்கு நாடு எங்கே போகிறது என்ற சலிப்பு ஏற்படுகிறது.

முன்பு குன்றக்குடி அடிகளார் தலைமையில் பட்டிமன்றங்கள் நடக்கும், அதில் அரசியலில் எதிரும் புதிருமானவர்கள் கலந்து கொண்டு கடுமையாக விவாதம் செய்வார்கள். இறுதியில் அடிகளார் தீர்ப்பு கூறுவார். அனைவரும் ஏற்றுக் கொள்வார்கள். ஆனாலும் அந்தத் தலைவர்கள் ஒருவருக்கு ஒருவர் பகை பாராட்டியது இல்லை.

காமராஜரும், ஜீவாவும், பெரியாரும், சிங்காரவேலரும் அரசியலில் வேறு வேறு கருத்து நிலைகளைக் கொண்டு இருந்தார்கள். ஆனாலும் அவர்களுக்குள் நட்பு இருந்தது. இப்போது அது சாகடிக்கப் படுகிறது. இப்போது பட்டி மன்றங்கள் விளையாட்டுப் பொருளாக மாறிவிட்டது.

நாடு விடுதலை பெற்றபினர் இந்தியாவிற்கு அரசியல் சாசனம் தேவைப்பட்டது. அதை யார் தயாரிப்பது என்ற நிலை வந்தபோது, மகாத்மா சொன்னார். அரசியல் சட்டத்தை தாயாரிக்க சட்டம் தெரிந்தவராகவும் இருக்கவேண்டும் அதே நேரத்தில் சமூகத்தின் அடித்தளத்தில் இருந்து வந்தவராகவும் இருக்கவேண்டும், அப்படிப்பட்ட ஒருவரிடம்தான் அந்தப் பணியை ஒப்படைக்க வேண்டும், என்று கூறி, அந்தப் பணியை செய்ய தகுதியானவர் அம்பேத்கர்தான். எனவே, அதை அம்பேத்கரிடம் கொடுக்கவேண்டும் என்று கூறினர்.

அதை நேருவும் ஏற்றுக் கொண்டார். அம்பேத்கர் அரசியல் சட்டத்தை தயாரித்து முடித்தவுடன் அனைவரும் பாராட்டினார்கள். அம்பேத்கர், "மதமா அரசியலா என்றால் அரசியல்தான். அரசியலில் சகிப்புத்தன்மை இருந்தால்தான் நாடு ஒன்றுபட்டு இருக்கும் என்று சொன்னார்". அதன் அடித்தளம் தற்போது நொறுக்கப்படுகிறது.

அப்போது அம்பேத்கரும், காந்தியும், நேருவும் நேர் எதிரான கொள்கை உடையவர்களாக இருந்தார்கள். இருந்தும் அவர்கள் அந்தப் பணியை அம்பேத்கரிடம் ஒப்படைத்தார்கள். அதில் ஒரு சகிப்புத் தன்மை இருந்தது. ஆனால் இப்போது மாற்றுக் கருத்து உடையவர்கள் கொல்லப் படுகிறார்கள். என்றால் வேதனையாக இருக்கிறது.

முன்பு ஜெர்மனியில் யூதர்கள் கொல்லப்பட்டார்கள் அவர்கள் அகதிகளாக இந்தியாவிற்கு வந்தார்கள். அவர்களை நாம் வரவேற்று கொச்சியில் இடம் கொடுத்து வாழவைத்த பெருமை நம்முடையது. இதை விவேகானந்தரே பாராட்டினார்.

நம்முடைய அரசியல் சட்டம் அரசுக்கு அறிவியல் ரீதியான பார்வை வேண்டும் என்று கூறுகிறது. ஆனால் தற்போது மூடப் பழக்கத்தை தான் முதலாகப் பார்க்கிறார்கள். ஒரு மனிதன் என்ன சாப்பிட வேண்டும் என்று தீர்மானிப்பது அவனது உரிமை. இதைத்தான் சாப்பிடவேண்டும் என்றால் சமூகக் கட்டுப்பாடு குழைந்து போகிறது.

நாட்டின் ஒற்றுமையை காப்பாற்ற சங்கமம் போன்ற அமைப்புகள் தேவை முற்போக்கு சிந்தனை உள்ளவர்கள் ஒன்று படவேண்டும். என்றும் அவர் பேசினார்.

நன்றி : ஜனசக்தி செய்தியாளர் தோழர் மணிபாரதி
(செய்தி மற்றும் படங்களுக்காக)

தந்தை பெரியாரின் 140ஆவது பிறந்தநாள் விழா!

கோவை வெங்கிட்டாபுரத்தில் அறிவுலக ஆசான் தந்தை பெரியாரின் 140ஆவது பிறந்தநாள் விழா நடந்தது !    பகுத்தறிவுப் பகலவன் தந்தை‍‍ பெரியா...